Saturday 22 October 2011

தீபாவளி

              தீபாவளி அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்த பண்டிகை.  மதசார்பு இல்லாமல் அணைத்து குழந்தைகளும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழப்படுவது.  எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும் தனிப்பட்டமுறையில் தீபாவளி எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை.   இன்னும் இரண்டொரு நாளில் தீபாவளி வரும் இந்த சமயத்தில் நான் கொண்டாடிய தீபாவளி பற்றி கூற விழைகிறேன்.

             வீட்டில் நான் ஒரே பிள்ளை, பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் அம்மா என்னை விளையாட அனுமதிப்பதும் இல்லை, ஆனால் தீபாவளி அன்று வெளியில் வந்து தானே பட்டாசு வெடிக்க முடியும்.  பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன் தீபாவளி அன்று அம்மாவின் கண்காணிப்பில் விளையாட அனுமதி கிடைக்கும் என்பதும் தீபாவளி எனக்கு பிடிக்க ஒரு காரணம்.  ஒவ்வொரு வருட துவக்கத்திலும் புது நாள்காட்டி கிடைத்ததும் நான் செய்யும் முதல் வேலை தீபாவளி எப்பொழுது என தேடுவதுதான் அவ்வளவு  விருப்பம்.  தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அம்மாவிடம் புது துணி எடுக்க விண்ணப்பம் போட்டுவிடுவேன்.  தினமும் ஒரு முறையேனும் அதை நியாபகபடுத்தவில்லை என்றால் தூக்கம் வராது.  தீபாவளியும் எனது பிறந்தநாளும் இருவார இடைவெளியில் வரும் என்பதால் அம்மா இரண்டு புதுத்துணி வாங்கித்தருவார்கள்.


            அடுத்த குறிக்கோள் பட்டாசு அது அப்பா மனது வைத்தால் தான் முடியும்.  அப்பா எளிதில் வாங்கித்தரமாட்டார்.  அப்படியே வாங்கித்தந்தாலும் மத்தாப்பு வகைகளே வாங்கித்தருவார்.  எனக்கோ பெரிய வேடிவகைகளை வெடிக்க ஆசை.  பக்கத்து வீட்டு அண்ணா ஊதுவர்த்தியை ஊதி ஊதி பட்டாசு பற்ற வைப்பதை பார்த்து அதைப்போல் எனக்கும் வைக்க ஆசை.   எவ்வளவு கெஞ்சினாலும் வெடி கிடைக்காது.  கொஞ்சம் வளர்ந்த பிறகு தீபாவளி அன்று மனமிரங்கி பிஜிலி வெடி வாங்கித்தருவார்.  பக்கத்து வீட்டு அண்ணாவைப்போல் ஊதுவர்த்தியை ஊதிஊதி வெடிப்பேன்.  அதில் கொஞ்சம் பட்டாசை சேமித்து வைத்துக்கொள்வேன் கார்த்திகை தீபத்திற்கு. 

           அடுத்து தீபாவளி பலகாரம் அது நான் கேட்காமலே கிடைக்கும்.   தொலைக்காட்சயில் முந்தினநாள் போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே நானும் அம்மாவும் செய்வோம்.  தீபாவளியில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் கோவிலுக்கு போகவேண்டும் என்று காலைலேயே எழுப்பமாட்டார்கள்.  அன்று முழுக்க அசைவ சாப்பாடு தான்.  காலையில் இட்லி, மட்டன் , மதியம் பிரியாணி, இரவு சோறு, கோழிக்குழம்பு.  இது தவிர பாயாசமும் உண்டு.  பட்டாசு வெடிப்பதும், சாப்பிடுவதும், தொலைகாட்சி நிகழ்ச்சி பார்ப்பது தான் அன்றைய முக்கிய வேலை.  மாலை அத்தை வீட்டிற்கு சென்று அங்குஉள்ள பட்டாசையும் வெடிப்பேன்.  அடுத்து பள்ளிக்கு தீபாவளி துணியை போட்டு சென்று பட்டாசு வெடித்ததில் துணிக்கு ஏற்பட்ட காயத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் முடியும் எனது தீபாவளி.

           இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் புதுத்துணி நான் எடுத்துக்கொடுக்கிறேன்.  பலகாரம் கடையில் வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  தொலைகாட்சி சிறப்பு காட்சிகள் தொல்லை தருவதாகவே இருக்கிறது.  பட்டாசு கேட்டால் அப்பாவும் அம்மாவும் முறைக்கிறார்கள்.  எப்படி தான் மாறினாலும் தீபாவளி தீபாவளி தான்.  அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.