Sunday, 1 January 2017

தாயம்

கண்முன்னே விரிந்துகிடக்கும் இந்த பரமபதத்தின்
சுழியத்தில் நிற்கிறேன் ..
என் கணக்கை துவங்க தேவை ஒரு தாயம்...
அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும் ...
என்னை இலக்கிற்கு ஏற்றிவிட
காத்திருக்கும் ஏணிகளை சந்திக்க  ..
வேண்டும் ஒரு தாயம்!!!
தடையென என்னை விழுங்க காத்திருக்கும் பாம்புகளை
ஒரு அலட்சிய புன்னகையோடு கடக்கவேனும்...
வேண்டும் ஒரு தாயம்!!!!
வெறுங்கைகளோடு காத்திருக்கும் நான்
என் சோழிகளை எந்த சமுத்திரத்தில்
தொலைத்தேனோ....
கடல் புகுந்து சோழி சேர்க்க நான் பொன்னியின் செல்வனின்
சமுத்திரகுமாரி அல்லள் ....
ஆழி கொண்ட சோழியை
அலைகக்கும் என காத்திருக்கும்
வானதி ......

Friday, 17 January 2014

யாரிவள் .....!!!???

இருள்படர்ந்த ஓர் வனத்தினூடே
நகர்ந்து கொண்டிருந்தேன்....

எங்கு நோக்கினும் இருள்....

பாதையில் எதுவும் தடுத்ததாக உணர்வில்லை...

சுற்றும் வெறுமை...

சுவாசிப்பதாக தோன்றவில்லை...
உயிரோடிருக்கிறேன்....
ஒருவேளை காற்றும் இருக்கலாம் ....

துணைக்கு ஒரு தீபம் எடுத்து வந்ததாக நினைவு .....
எதுவும் புலப்படவில்லை....

அதோ அங்கு சற்று அருகில்
யாரோ சென்று கொண்டிருக்கிறார்கள்!!!

யாரது???!!!
ஆணா?  பெண்ணா ?
தெரியவில்லை ....

ஒருகணம் ஆந்தையாக
இருந்திருக்கலாம் என தோன்றிற்று....

பெண் தான் என்பதை
அழகாக முடிந்த கூந்தலை சரி செய்யும்
அவள் கரம் கொண்ட வளையல் கூறிற்று ....

யார் இவள்??  என அறிய துடித்தேன்
பெண்களுக்கே உரிய ஆர்வத்தோடு !!

ம்ம்ம்ம்....
பேசா மடந்தை போல் எதையோ
யோசித்துக்கொண்டிருக்கிறாள்....

சரி அவளிடமே கேட்டுவிடலாம்....
அழைக்க கை நீட்டினேன்
அட!!! அவளும் யாரையோ அழைக்கிறாளே.....

சரி... விரைந்து செல்வோம்....
அட!!!  அவளும் விரைகிறாள் ...

எவ்வளவு விரைந்தும்
அவளுக்கும் எனக்குமான இடைவெளியை
குறைக்கவே முடியவில்லை...

ஆ... அட ....  அய்யோ...  விழுந்துவிட்டேனே...

இவளை துரத்தபோய்
கீழே கிடந்த கல்லை
கவனிக்க தவறினேனே.....

தீபமும் விழுந்துவிட்டது ....

என்னை தூக்கிவிட வருகிறாளா???.
மெல்ல  நோக்கினேன்....

என்ன இது.... !!!

அவளை காணவில்லை ...!!!

சண்டாளி ....  உதவிகூட செய்யாமல் போய்விட்டாளே....
ம்ம்ம்ம்.....

தீபத்தை எடுத்துவிட்டு நிமிர்ந்தேன்
அட!!!...  அதோ அவள் ....

தீபத்தை சரிசெய்ய மறைத்தேன்....

மீண்டும் அவளை காணவில்லை..

ஒளியை விடுவித்தேன் ....

மீண்டும் அவள் வந்தாள்....

என்னடா இது என நான் விழிக்க.....
.
.
.
.
.
.
.
அட... முண்டமே....
நீ துரத்தி வந்தது உன் நிழலைத்தான்
என் ஆறாம் அறிவு காறித்துப்பியது...

ஙே......


#நீங்களும் துப்பிட்டு போங்க .....

Friday, 20 January 2012

நண்பன்

                 விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் இலியானா  நடித்து ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் வெளியிடாக வந்துள்ள படம் நண்பன்.   நண்பன் விஜய் படம் என்றோ அல்லது ஷங்கர் படம் என்றோ சொல்ல முடியாது.. அது ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான், மாதவன் , சர்மான் ஜோஷி நடித்த 3 இடியட்ஸ் என்ற இந்தி படத்தின் தமிழ் பதிப்பே.   கதை பற்றி நான் இங்கு கூறினால் அது 3 இடியட்ஸ் படத்தின் விமர்சனமாகிவிடும் அதனால் கதை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.   நண்பன் மற்றும் 3 இடியட்ஸ் படத்தினை ஒப்பிட்டு மட்டுமே எழுதுகிறேன்.

                    நண்பன் படத்தின் நடிகர்களின் நடிப்பை மட்டுமே ஒப்பிட முடியும் ஏன் என்றால் காட்சி, வசனம் எல்லாம் 3 இடியட்ஸ் தான்.  ஜீவா, சர்மான் ஜோஷி நடித்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான தேர்வு, அதை மிகக்கச்சிதமாகவும் செய்துள்ளார்.    ஜீவாவின் நடிப்பு சர்மான் ஜோஷியை காப்பியடித்தது போலவும் இல்லை, வித்தியாசமாகவும் இல்லை கதாப்பாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்துள்ளார்.  ஆரம்பம் முதல் கடைசிவரை இவரது நடிப்பு தெளிவாக இருக்கிறது.

                   சத்யராஜ் இதுவும் எதிர்பார்த்த தேர்வு தான் போமன் இராணி கதாப்பாத்திரத்திற்கு.   சத்யராஜ் சில காட்சிகளில் வழக்கமான சத்யராஜ் போலவும் பெரும்பாலான காட்சிகளில் போமன் இராணி போலவும் நடித்துள்ளார்.  சத்யனுடைய நடிப்பும் இதைப்போலவே பல நேரங்களில் சாதாரண சத்யனாகவும் சில நேரங்களில் ஓமி வைத்யாவைப்போலவும் உள்ளது.  இந்த வித்யாசம் சத்யராஜின் கதாபாத்திரத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஆனால் சத்யனின் கதாபாத்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக எனக்கு தோன்றுகிறது.  சரியாக தமிழ் தெரியாத பாத்திரமாக அறிமுகபடுத்திவிட்டு பல இடங்களில் நல்ல தமிழில் பேசியது மாறுபட்டு தோன்றியது எனக்கு.

         
                  3 இடியட்சில் மாதவனின் நடிப்பில் இருந்த உயிரோட்டம் ஸ்ரீகாந்தின் நடிப்பில் இல்லையென்றே கூறலாம்.   மற்றபடி மில்லிமீட்டராக வரும் சிறுவன், ஸ்ரீகாந்த், ஜீவா இருவரின் பெற்றோர்,  இலியானாவின் அக்கா கதாபாத்திரங்கள் தங்களின் பங்கை நிறைவே செய்திருக்கிறார்கள்.   படத்தின் கதாநாயகி இலியானா அவரும் நன்றாகவே செய்திருக்கிறார்.  இலியானாவை இணையதளத்தில் விமர்சித்தவர்கள் நண்பன் படத்தில் அவரின் வசன உச்சரிப்பை பற்றி எதுவுமே விமர்சிக்கவில்லை.  தமிழ் படாதபாடு படுகிறது இலியானாவின் உச்சரிப்பில் (பின்குரல் யாருன்னு தெரியல).   எஸ். ஜே. சூரியாவின் நடிப்பும் நல்லா இருக்கு, சரியான தேர்வு.

                  இனி விஜய், அமீர் கான் செய்த கதாபாத்திரத்தை அதன் அழகு கெடாமல் செய்ததர்க்கே அவரை பாராட்டலாம்.  பறந்து பறந்து சண்டை போடறது, பஞ்ச் டயலாக் பேசறது, அரசியல் வசனம் போன்றவை இல்லாத விஜய பாக்ரதுக்கே நிம்மதியா இருக்கு.  விஜய் ரசிகர்களுக்கு பிடித்த விஜய் என்றுகூட சொல்லலாம்.  பல காட்சிகளில் அமீர் கான் கொடுத்த ரியாக்ஷன்னே விஜயும் கொடுக்க முயற்சித்துள்ளார் அதில் 90 % வெற்றியும் அடைந்துள்ளார் என சொல்லலாம்.  All is well விஜய் சொல்றத விட அமீர் சொல்ற விதம் நல்ல இருக்கு.  நண்பன் விஜய் சூப்பர்.

                 இது எல்லாம் 3 இடியட்ஸ் படத்தை 25 முறைகளுக்கு மேல் பார்த்ததால் எனக்கு தோன்றியவை.   3 இடியட்ஸ் படம் பார்க்காதவர்களுக்கு நண்பன் ஒரு சிறந்த படமே.  அதுவும் கடைசி பகுதி சிறப்பாக அமைந்துள்ளது எனக்கு ஒப்பிட தோணவில்லை நண்பன் படமாகவே ரசித்தேன்.  என்னை பொறுத்தவரை நண்பன் ரொம்ப நல்லா இருக்கு.  ஆனால் எனக்கு புரியாத ஒன்று பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கர் ஏன் இந்த படத்த எடுத்தார்???   3 இடியட்ஸ் படத்தை யார் எடுத்தாலும், எந்த மொழியில் எடுத்தாலும் எந்த மாற்றமும் செய்யமுடியாது அப்டி இருக்கும் பொழுது சங்கர் ஏன் இந்த படம் செய்தார்??  

Saturday, 26 November 2011

என் நாட்குறிப்பின் ஒரு பக்கம்

            இது எனது முதல் முயற்சி.   என் அனுபவங்களையே எழுதிவந்த நான் முதல் முறையாக ஒரு கற்பனை கதை எழுதியிருக்கிறேன்.  விமர்சனங்கள் எதிர்பாக்கப்படுகின்றன.

            எனது பெயர் சம்சங்கிகோ என்சாம் எக்கோ 32 ....   என்சாம் எக்கோ 32  என்ற எந்திரக்கடவுளை வேண்டியதால் நான் பிறந்தேனாம் அதனால் அவர்பெயரே எனக்கு வைத்துவிட்டார்கள்.   சரி... எனது orange mPad இன் படி நான் இப்பொழுது செய்ய வேண்டியது இன்று நடந்தவைகளை தொகுத்து அனுப்ப வேண்டும்... அதாவது ரிப்போர்ட் ரெடி பண்ணனும்...

            25 / 11 / 2524 காலை 2 மணிக்கு தொடங்கியது இந்நாள், வழக்கம் போல வெயில் 58  டிகிரி.  எனது ரோபோ வழங்கிய தேனீர் கலவையையும், கார்போஹைட்ரெட் மாத்திரை 1 , வைட்டமின் 2 , புரோட்டின் 2  சாப்பிட்டுவிட்டு 204 வது மாடியில் உள்ள எனது அறையிலிருந்து கிளம்பி sky scooter மூலம் என் அலுவலகத்திற்கு கிளம்பினேன்.   சரியாக அலுவலகம் புறப்படும் பொழுது பக்கத்துக்கு அறை நண்பர் என் mPad கு அழைத்தார்.  அவர் ரோபோ மனைவிக்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனையாம், நல்லவேள என் மனைவி ரோபோ இல்ல... ம்ம்ம் ..  அவருக்கு ஆறுதல் சொல்லபோக அலுவலகத்திற்கு தாமதம் ஆகியது.     போகும் வழியில் ஸ்கூட்டர்கு  செமிச்டோல் போட்டேன்.

                அலுவலகத்திற்கு தாமதம் ஆனதால் என் ரோபோ மேனேஜர் கத்தியது.  மேனேஜர் மனுஷனா இருந்தாலும் ரோபோவாக இருந்தாலும் கத்தத்தான் செய்வாங்க போல...   காலை 7 மணிக்கு அலுவலக இடைவேளையில் கார்பரேஷன் ஆபிசுக்கு வீட்டுல சொட்டுநீர் குழாய்ல தண்ணீர் வராததைப்பற்றி கம்ப்ளைன்ட் பண்னச்சென்றேன்.   அரசாங்க அலுவலகத்தில் வேலைசெய்யும்  எந்த ரோபோகும் சம்பளம் கொடுக்கல போல அவ்ளோ மெதுவா வேலை செய்யுது.  மனுஷன் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ரோபோ கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்க அலுவலகம் என்னமோ மாறுவது இல்லை.    வரும் வழியில்  நண்பர் சந்கிச்கியை சந்தித்தேன் அவருக்கு திருமணம் என டிஜிட்டல் அழைப்பிதழை தந்து சென்றார்.

             மதிய உணவு எடுத்துசெல்ல மறந்துவிட்டதால் உணவு விடுதிக்கு சென்று 3 கார்போஹைட்ரெட் , 4 வைட்டமின் , 1 கொழுப்பு மாத்திரையும் 20 ml தண்ணிரையும் வாங்கிக்கொண்டேன். தண்ணீருக்கான மாத்திரையையும் கண்டுபிடிக்கபோவதாக அறிக்கை கொடுத்திருக்காங்க.... கண்டுபிடிச்சா நல்ல இருக்கும் விலைவாசி தாங்க முடியல.  3 மணிக்கு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் ஷாப்பிங் சென்றேன்.  நேனோ எரோ ட்டிக் பைபரில் செய்த டிரஸ் வாங்கினேன்.  அடிக்கிற வெயிலுக்கு இது குளுமை தரும் என விளம்பரத்தில் பார்த்தேன்

            மாலை 5 மணிக்கு நண்பர்களுடன் 450 வது  மாடியில் சிறிய சந்திப்பு.   7 மணிக்கு இரவு உணவு.  8 மணிமுதல் 12 மணிவரைக்கும் வால் ஸ்க்ரீன் டிவி ப்ரொஜெக்டரில் புதிதாக வெளிவந்த படங்களை பார்த்தேன்.  புதிதாக இன்டர்நெட்டில் அறிமுகபடுத்தியிருக்கும்  moongil- இல் புதிதாக வந்த அனைத்து நாட்டு படங்களையும் அடுத்த நாளே பார்க்கலாம்.    மணி 12 கு தூக்க மாத்திரை ஒன்றை விழுங்குவதன்மூலம் இந்நாள் இனிதே நிறைவடைகிறது.


பிகு 
என் பெயர் சம்சங்கிகோ கு விளக்கம் சொல்லலியே அது சன்முககுமார் என்ற என் 4 தலைமுறைக்கு முந்தய தாத்தாவின் பெயர் மருவு .
             

Thursday, 10 November 2011

வேலாயுதம்

                         வேலாயுதம் இளையதளபதி நடித்து தீபாவளிக்கு வெளியான படம்.  படம் வெளியாகி ரசிகர்கள் சண்டை போட்டுமுடித்த இந்த நேரத்தில் என்ன விமர்சனம் எழுதவேண்டிகிடக்கு என நீங்கள் யோசிக்கலாம்.  என்ன செய்ய நான் படம் பார்த்தது நேற்று தானே.  படம் பார்த்து முடித்தவுடனேயே முடிவு செய்துவிட்டேன் பதிவு கண்டிப்பாக எழுதியாக வேண்டும் என்று.   இந்த பதிவில் நான் எழுதபோவது அனைத்தும் எனது கருத்துக்கலேயன்றி யாரையும் புகழவேண்டும் என்றோ அல்லது இகழ வேண்டும் என்றோ எழுதுவது அல்ல.

                        விஜய் படம் என தெரிந்ததுமே கதையும் தெரிஞ்சாச்சி.. டிரைலர் பாத்ததும் படம் பார்த்த திருப்தி வந்துவிட்டது.  இருந்தாலும் விஜய் படம்னா பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அதனால் படம் பாக்கலாம்.   சரி இனி வேலாயுததைப்பற்றி  பார்ப்போம்....   முதல் காட்சியிலேயே ஏதோ முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழ் நாட்டு அரசியல்வாதியை கடத்தி தமிழ் நாட்டின் அமைதியை குலைக்க ஏற்பாடு செய்கிறர்கள்.  ஒருவேள தெரியாம விஜயகாந்த் படத்துக்கு வந்துட்டோமானு யோசிச்சிட்டே படத்த பார்க்க துவங்கினேன்.  அடுத்த காட்சில விஜய் அரிவாள் எடுத்துட்டு ஓடிவரார்...  அபாடா விஜய் படம் தான்.... இப்ப ஏதோ சண்டை வரும்னு பாத்தா தங்கச்சிக்கு ட்ரைன்ல இடம் புடிக்கிக்ராறு.. அப்டியே இந்த அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இடையிலான பாசத்த flashbackலையே  புரியவைக்கிறாங்க...                        விஜய் தற்செயலாக செய்யும் செயல்கள் எல்லாம் ஜெனிலியா உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் செய்வதாக மக்கள் நம்ப விஜய்க்கே தெரியாமல் விஜய் மக்களின் கடவுளாகிறார்.  விஜய்க்கு உண்மை தெரிய வரும்பொழுது எனக்கு எதற்கு வம்பு என ஒதுங்க அவருக்கே வருகிறது பிரச்சனை... தன்னை ஏமாற்றிய சீட்டு கம்பெனிக்காரனை துவைப்பதில் துவங்குகிறது சூப்பர் ஹீரோ பயணம்.   அனைத்து கெட்டவர்களையும் துவைத்து, தங்கையை இழந்து, மக்களுக்கு அறிவுரைகூறி இனிதே முடிகிறான் வேலாயுதம்.  இது கதை சுருக்கம்.  

                        விஜய் படம் அதனால் அவர் மட்டுமே படம் முழுக்க வருகிறார், மற்ற எல்லோரும் வந்து தலைகாட்டிவிட்டு செல்கிறார்கள்.    முதலில் ஜெனிலியா எல்லா படத்திலும் லூசு பெண்ணாக வருபவர் இதில் கொஞ்சம் நடித்துள்ளார்.   ஜெனிலியா வழக்கமாக செய்யும் வேலையே  இதில்  ஹன்சிகா வேலை.   விஜயை சுத்தி சுத்தி வருகிறார் அவ்வளவு தான்.  படத்திற்கு இருக்கும் ஒரே ஒரு பிளஸ் சந்தானம்.   எல்லா படத்தலையும் வில்லன்கள் பக்கம் பக்கமா வசனம் பேசுவாங்க இதில்  அந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.  ராகவ் கொடுத்த சம்பளத்திற்கு வேலைசெய்திருக்கிறார் பிரச்சனை நடக்கும் இடத்திற்கெல்லாம் வேலாயுதம் வர்றாரோ இல்லையோ இவர் கரெக்டா வந்து வேலாயுதம் புகழ்பாடிட்டு போறாரு.

                   சரண்யா மோகன் அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி... ஊர் மக்களை காப்பாத்த தன் உயிரை தியாகம் செய்கிறார்.  இது தவிர ஊர் மக்கள், போலீஸ், சில வில்லன்கள்  இப்டி பலர் இருந்தாலும் எல்லாரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவதால் அவர்களை பற்றி பேச எதுவும் இல்லை.    பொதுவாக இது போன்ற படங்களில் ஒரே மாதிரியான பிரச்சனைகளை ஹீரோ சமாளிப்பார்.  இதில் பல பிரச்சனை அதனாலோ எனவோ எந்த மக்கள் பிரச்சனையும் மனதை தொடும் வகையில் படமாக்கப்படவில்லை.  இது தவிர படம் முழுக்க அரசியல் பொடி தூவியிருக்கிறார் ராஜா.  பாடல்கள் எல்லாம் நன்றாக உள்ளது.  விஜயை சூப்பர் ஹீரோவாக காட்டுவதிலேயே முனைப்பாக இருந்ததாலோ எனவோ எந்த உறவும் ஆழமாக பிரதிபலிக்கப்படவில்லை.   வழக்கமாக நடனத்தில் தன் தனித்துவத்தை காண்பிக்கும் விஜய் கடந்த சில படங்களாக ஏதோ ஆடிவிட்டு போகிறார்.  சிம்ரனுக்கு பிறகு நடனம் ஆடத்தெரிந்த ஒரு கதாநாயகி விஜய்க்கு ஜோடியாக்கப்படவில்லை என்பது எனது கருத்து.  

                        இது போன்ற படத்தை எடுக்க பேரரசு போதுமே ராஜா எதற்கு??   அரசியல் நெடி இல்லாமல் சாதாரணமாக எடுத்திருந்தால் திருப்பாச்சி மாதிரி ஒருவேளை பெரிய வெற்றி அடைந்திருக்கலாம்.    விஜயிடமிருந்து வித்தியாசமான நடிப்பு அல்ல வித்தியாசமான கதைகளம் அமைந்த படங்களையாவது எதிர்பார்க்கிறோம்.   வில்லு படத்திற்கு பிறகு அவரது ரசிகர்களே ஏமாற்றம் அடைந்திருப்பது உண்மை.  இதை உணர்ந்து இனிவரும் படங்களையாவது வித்யாசமாக தேர்ந்தெடுப்பர் என நம்புவோம்.

Saturday, 22 October 2011

தீபாவளி

              தீபாவளி அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்த பண்டிகை.  மதசார்பு இல்லாமல் அணைத்து குழந்தைகளும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழப்படுவது.  எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும் தனிப்பட்டமுறையில் தீபாவளி எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை.   இன்னும் இரண்டொரு நாளில் தீபாவளி வரும் இந்த சமயத்தில் நான் கொண்டாடிய தீபாவளி பற்றி கூற விழைகிறேன்.

             வீட்டில் நான் ஒரே பிள்ளை, பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் அம்மா என்னை விளையாட அனுமதிப்பதும் இல்லை, ஆனால் தீபாவளி அன்று வெளியில் வந்து தானே பட்டாசு வெடிக்க முடியும்.  பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன் தீபாவளி அன்று அம்மாவின் கண்காணிப்பில் விளையாட அனுமதி கிடைக்கும் என்பதும் தீபாவளி எனக்கு பிடிக்க ஒரு காரணம்.  ஒவ்வொரு வருட துவக்கத்திலும் புது நாள்காட்டி கிடைத்ததும் நான் செய்யும் முதல் வேலை தீபாவளி எப்பொழுது என தேடுவதுதான் அவ்வளவு  விருப்பம்.  தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அம்மாவிடம் புது துணி எடுக்க விண்ணப்பம் போட்டுவிடுவேன்.  தினமும் ஒரு முறையேனும் அதை நியாபகபடுத்தவில்லை என்றால் தூக்கம் வராது.  தீபாவளியும் எனது பிறந்தநாளும் இருவார இடைவெளியில் வரும் என்பதால் அம்மா இரண்டு புதுத்துணி வாங்கித்தருவார்கள்.


            அடுத்த குறிக்கோள் பட்டாசு அது அப்பா மனது வைத்தால் தான் முடியும்.  அப்பா எளிதில் வாங்கித்தரமாட்டார்.  அப்படியே வாங்கித்தந்தாலும் மத்தாப்பு வகைகளே வாங்கித்தருவார்.  எனக்கோ பெரிய வேடிவகைகளை வெடிக்க ஆசை.  பக்கத்து வீட்டு அண்ணா ஊதுவர்த்தியை ஊதி ஊதி பட்டாசு பற்ற வைப்பதை பார்த்து அதைப்போல் எனக்கும் வைக்க ஆசை.   எவ்வளவு கெஞ்சினாலும் வெடி கிடைக்காது.  கொஞ்சம் வளர்ந்த பிறகு தீபாவளி அன்று மனமிரங்கி பிஜிலி வெடி வாங்கித்தருவார்.  பக்கத்து வீட்டு அண்ணாவைப்போல் ஊதுவர்த்தியை ஊதிஊதி வெடிப்பேன்.  அதில் கொஞ்சம் பட்டாசை சேமித்து வைத்துக்கொள்வேன் கார்த்திகை தீபத்திற்கு. 

           அடுத்து தீபாவளி பலகாரம் அது நான் கேட்காமலே கிடைக்கும்.   தொலைக்காட்சயில் முந்தினநாள் போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே நானும் அம்மாவும் செய்வோம்.  தீபாவளியில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் கோவிலுக்கு போகவேண்டும் என்று காலைலேயே எழுப்பமாட்டார்கள்.  அன்று முழுக்க அசைவ சாப்பாடு தான்.  காலையில் இட்லி, மட்டன் , மதியம் பிரியாணி, இரவு சோறு, கோழிக்குழம்பு.  இது தவிர பாயாசமும் உண்டு.  பட்டாசு வெடிப்பதும், சாப்பிடுவதும், தொலைகாட்சி நிகழ்ச்சி பார்ப்பது தான் அன்றைய முக்கிய வேலை.  மாலை அத்தை வீட்டிற்கு சென்று அங்குஉள்ள பட்டாசையும் வெடிப்பேன்.  அடுத்து பள்ளிக்கு தீபாவளி துணியை போட்டு சென்று பட்டாசு வெடித்ததில் துணிக்கு ஏற்பட்ட காயத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் முடியும் எனது தீபாவளி.

           இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் புதுத்துணி நான் எடுத்துக்கொடுக்கிறேன்.  பலகாரம் கடையில் வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  தொலைகாட்சி சிறப்பு காட்சிகள் தொல்லை தருவதாகவே இருக்கிறது.  பட்டாசு கேட்டால் அப்பாவும் அம்மாவும் முறைக்கிறார்கள்.  எப்படி தான் மாறினாலும் தீபாவளி தீபாவளி தான்.  அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.  

Saturday, 27 August 2011

கிராமத்து வாழ்க்கை

                     
                      இன்று அதிகமாக மக்கள் நகரத்தில் வாழ்கிறார்கள், அதில் பலரின் உறவினர்கள் கிராமத்தில் வாழ்பவர்களாக இருக்கவாய்ப்பு உண்டு.   அவர்கள் தனது சிறு வயதில் பள்ளிவிடுமுறை நாட்களில் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பார்கள்.   அன்றைய நாட்களின் நினைவுகள் இன்றும் அவர்களுக்கு இருக்கும்.   தனது வாழ்கையில் சிறந்த நாட்களாக தனது பிள்ளைகளிடம் கூறி இன்றைய நகரத்து வாழ்கையை அங்கலாய்ப்பவர்கள் பலர்.  

                       நானும் எனது சிறுவயதில் விடுமுறைக்கு என் அத்தை வீட்டிற்க்கு செல்வதுண்டு.   வீட்டில் ஒரே பிள்ளையாக வளரும் எனக்கு அத்தை வீடு ஒரு சொர்க்கம் போல தோன்றும்.  இங்கு கான்க்ரீட் வீடுகளின் வெப்பத்தில் வாழ்ந்து விட்டு அத்தையின் ஓட்டு வீடு குளுமையாக இருக்கும்.  தொலைகாட்சி போன்ற பொழுதுபோக்கு சாதனம் ஏதும் இல்லாததால் மதியவேளைகளில் ஊர்சுற்ற போவது வழக்கம்.   அத்தை பிள்ளைகள், அவர்களின் பக்கத்துக்கு வீடு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வயல், தென்னந்தோப்பு, குளம், ஆறு போன்றவற்றிக்கு செல்வோம்.  மதிய வெயிலில் ஆறில் குளிப்பது அவ்வளவு சுகமாக இருக்கும்.   அப்படியே கிளம்பி வயல்வெளிகளை கடந்து தென்னந்தோப்பிற்கு செல்வோம்.  வழியில் வயலுக்கு தண்ணீர்பாய்ச்ச வாய்க்கால் இருக்கும், அதில் இறங்கி தண்ணீரில் விளையாடிக்கொண்டே செல்வோம்.   வாய்க்கால் ஓரத்தில் வளர்ந்திருக்கும் ஒரு செடியின் காம்பை எங்களை கூட்டிச்செல்லும் அண்ணா வெட்டிவைத்துக்கொள்வார்கள்.


                       தோப்பு வந்ததும் இளநீர் பறித்து வெட்டிவந்த காம்பை வைத்து உறுஞ்சி குடிப்போம்.  காம்பையே உறிஞ்சிகுழலாக மாற்றிய அண்ணாவின் அறிவு வியப்பாக இருக்கும்.  மாலை வீடு திரும்பியதும் பல்லாங்குழி, பாண்டி, தென்னைமட்டை கிரிக்கெட், ஏழாங்கல் விளையாட்டு போன்றவை விளையாடுவோம்   கோடை விடுமுறை நாட்களில் தான் ஊர் காவல் தெய்வங்களின் திருவிழாக்கள் வரும்.  திருவிழா நாட்களில் நாள் முழுக்க கோவிலிலேயே இருப்போம்.  10  நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினம் பூஜைகள் நடப்பது போக இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.  அதை பார்க்க 6 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு 4 மணிக்கே செல்வோம்.   அக்கா, அத்தை, சித்தி என எல்லோர்க்கும் இடம் பிடித்துகொடுப்போம்.  நிகழ்ச்சி பாத்துக்கொண்டே அங்கேயே தூங்கிவிடுவோம்.  காலையில் விழித்தால் வீட்டில் இருப்போம்.                       கடைசி 3 நாட்கள் திருவிழா விஷேசமானது.  சாமியாட்டம், வில்லுபாட்டு, கணியான் போன்ற கிராமிய நிகழ்சிகள் நடைபெறும்.  வில்லு பாட்டு கதை கேட்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.  சுடலைமாடன் கதை, நல்லதங்காள் கதை போன்றவற்றை பாட்டுடன் சேர்ந்து கேட்கும் பொது நாம் நம்மையே மறந்து கதையில் ஒன்றிவிடுவோம்.  கணியான் ஆடுபவர்கள் பெண்வேடமிட்டு ஆடுவார்கள்.  அவர்கள் ஆணா, பெண்ணா என சந்தேகத்துடனேயே அவர்களின் அலங்காரத்தை பார்த்துக்கொண்டிருப்போம்.

                      மாமா வாங்கி கொடுத்த புது துணியை போட்டுக்கொண்டு சாமியாட்டம் பார்க்க போவோம்.  கையில் தீ பந்தம் வைத்துக்கொண்டு ஆடும் சாமியாடியை பார்க்க மிரட்ச்சியாக இருக்கும்.  உண்மையிலேயே சாமி வந்து ஆடுவதை பார்ப்பது போல் பயபக்தியாக பார்ப்போம்.  கொதிக்கும் மஞ்சள் தண்ணீரில் தென்னம் பூவை நனைத்து தன் முதுகில் அடித்துக்கொண்டு சாமி ஆடும்போது சிலதுளிகள் நம் மீது பட்டு விடும் சூடு தாங்கமுடியாமல் கத்திவிட்டு வீட்டிற்கு வந்ததும் அத்தையிடம் இதை சொன்னதும் அவள் " அதுதான் டா சாமி சக்தி, சாமியாடிக்கு எதுமே பன்னால பாத்தியா?  ஆடுனது அவன் இல்லடா, அவனுக்குள்ள இருந்த ஆத்தா" என்பாள் பயத்துடன் கேட்டுவிட்டு அடுத்த நாள் கடையில் டீ குடிக்கும் சாமியாடியயே பார்த்துக்கொண்டிருப்போம்.  அவரே கடவுள் போல தோன்றும்.  விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் பொது ஒரு வாரத்திற்கு இந்த கதை தான் நண்பர்களிடம் சொல்ல.

                       கொஞ்சம் வளர்ந்த பிறகு விடுமுறைக்கு அத்தை வீட்டிருக்கு செல்ல அனுமதி கிடைப்பதில்லை.   அண்மையில் அத்தை ஊருக்கு சென்றிருந்தேன் .  பழைய நிகழ்வுகளை எதிர்பார்த்து சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  பல வயல்கள், தோப்புகள் வீடுகளாக மாற்றப்பட்டு இருந்தன.  தெருவில் எந்த சிறுவர்களையும் பார்க்க முடியவில்லை.  கோவிலில் திருவிழா என அத்தை கூறிய பிறகே தெரிந்தது.  கோவில் வில்லுபாட்டு சத்தத்திற்கு பதிலாக வீடுகளில் ஓடும் தொலைக்காட்சியின் சத்தமே கேட்டது.  கடைசி நாள் மட்டும் தான் கோவிலில் கூட்டம் வருமாம், அதனால் அன்று மட்டுமே நிகழ்சிகள் நடைபெறுமாம்.

                         கிராமங்கள் மாறிக்கொண்டு வருவதைப்பற்றி பல கட்டுரைகள் படித்த போது பெரிதாக எதுவும் தோன்றாத எனக்கு அன்று அத்தை வீட்டிலிருந்து திரும்பும்போது மனம் கனமாக இருந்தது.  இப்பொழுதெல்லாம் எந்த சிறுவர்களும் விடுமுறைக்கு அத்தை, சித்தி வீட்டிற்கு செல்வதில்லை விடுமுறையில் கூட பல வகுப்புகளில் சேர்த்துவிடுகிறார்கள் நம் பெற்றோர்.  நமது முன்னோர் பார்த்து ரசித்த பல விஷயங்களை நாம் பார்க்கவில்லை,  நாம் ரசித்த சில விஷயங்களை கூட அடுத்த தலைமுறை பார்க்க போவதில்லை.  இப்படியே போனால் வருங்காலத்தலைமுறை இயந்திரங்களையும், கட்டிடங்களையும் மட்டுமே ரசிக்கவேண்டி வரும்.

                          இன்றைய குழந்தைகளிடமும் இயற்கையை ரசிக்க வேண்டும், கிராமிய கலைகளை அறியவேண்டும் என்ற ஆர்வம் இல்லை.  இதை பற்றி எடுத்து சொல்லவும் நமக்கு நேரமில்லை.   நாகரிகத்தில் முன்னேருவதாக எண்ணிக்கொண்டு நாம் நமது இயற்கையை இழந்துகொண்டிருக்கின்றோம்.  வருத்தப்படவேண்டிய விஷயம்........ :(