Saturday, 27 August 2011

கிராமத்து வாழ்க்கை

                     
                      இன்று அதிகமாக மக்கள் நகரத்தில் வாழ்கிறார்கள், அதில் பலரின் உறவினர்கள் கிராமத்தில் வாழ்பவர்களாக இருக்கவாய்ப்பு உண்டு.   அவர்கள் தனது சிறு வயதில் பள்ளிவிடுமுறை நாட்களில் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பார்கள்.   அன்றைய நாட்களின் நினைவுகள் இன்றும் அவர்களுக்கு இருக்கும்.   தனது வாழ்கையில் சிறந்த நாட்களாக தனது பிள்ளைகளிடம் கூறி இன்றைய நகரத்து வாழ்கையை அங்கலாய்ப்பவர்கள் பலர்.  

                       நானும் எனது சிறுவயதில் விடுமுறைக்கு என் அத்தை வீட்டிற்க்கு செல்வதுண்டு.   வீட்டில் ஒரே பிள்ளையாக வளரும் எனக்கு அத்தை வீடு ஒரு சொர்க்கம் போல தோன்றும்.  இங்கு கான்க்ரீட் வீடுகளின் வெப்பத்தில் வாழ்ந்து விட்டு அத்தையின் ஓட்டு வீடு குளுமையாக இருக்கும்.  தொலைகாட்சி போன்ற பொழுதுபோக்கு சாதனம் ஏதும் இல்லாததால் மதியவேளைகளில் ஊர்சுற்ற போவது வழக்கம்.   அத்தை பிள்ளைகள், அவர்களின் பக்கத்துக்கு வீடு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வயல், தென்னந்தோப்பு, குளம், ஆறு போன்றவற்றிக்கு செல்வோம்.  மதிய வெயிலில் ஆறில் குளிப்பது அவ்வளவு சுகமாக இருக்கும்.   அப்படியே கிளம்பி வயல்வெளிகளை கடந்து தென்னந்தோப்பிற்கு செல்வோம்.  வழியில் வயலுக்கு தண்ணீர்பாய்ச்ச வாய்க்கால் இருக்கும், அதில் இறங்கி தண்ணீரில் விளையாடிக்கொண்டே செல்வோம்.   வாய்க்கால் ஓரத்தில் வளர்ந்திருக்கும் ஒரு செடியின் காம்பை எங்களை கூட்டிச்செல்லும் அண்ணா வெட்டிவைத்துக்கொள்வார்கள்.


                       தோப்பு வந்ததும் இளநீர் பறித்து வெட்டிவந்த காம்பை வைத்து உறுஞ்சி குடிப்போம்.  காம்பையே உறிஞ்சிகுழலாக மாற்றிய அண்ணாவின் அறிவு வியப்பாக இருக்கும்.  மாலை வீடு திரும்பியதும் பல்லாங்குழி, பாண்டி, தென்னைமட்டை கிரிக்கெட், ஏழாங்கல் விளையாட்டு போன்றவை விளையாடுவோம்   கோடை விடுமுறை நாட்களில் தான் ஊர் காவல் தெய்வங்களின் திருவிழாக்கள் வரும்.  திருவிழா நாட்களில் நாள் முழுக்க கோவிலிலேயே இருப்போம்.  10  நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினம் பூஜைகள் நடப்பது போக இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.  அதை பார்க்க 6 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு 4 மணிக்கே செல்வோம்.   அக்கா, அத்தை, சித்தி என எல்லோர்க்கும் இடம் பிடித்துகொடுப்போம்.  நிகழ்ச்சி பாத்துக்கொண்டே அங்கேயே தூங்கிவிடுவோம்.  காலையில் விழித்தால் வீட்டில் இருப்போம்.                       கடைசி 3 நாட்கள் திருவிழா விஷேசமானது.  சாமியாட்டம், வில்லுபாட்டு, கணியான் போன்ற கிராமிய நிகழ்சிகள் நடைபெறும்.  வில்லு பாட்டு கதை கேட்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.  சுடலைமாடன் கதை, நல்லதங்காள் கதை போன்றவற்றை பாட்டுடன் சேர்ந்து கேட்கும் பொது நாம் நம்மையே மறந்து கதையில் ஒன்றிவிடுவோம்.  கணியான் ஆடுபவர்கள் பெண்வேடமிட்டு ஆடுவார்கள்.  அவர்கள் ஆணா, பெண்ணா என சந்தேகத்துடனேயே அவர்களின் அலங்காரத்தை பார்த்துக்கொண்டிருப்போம்.

                      மாமா வாங்கி கொடுத்த புது துணியை போட்டுக்கொண்டு சாமியாட்டம் பார்க்க போவோம்.  கையில் தீ பந்தம் வைத்துக்கொண்டு ஆடும் சாமியாடியை பார்க்க மிரட்ச்சியாக இருக்கும்.  உண்மையிலேயே சாமி வந்து ஆடுவதை பார்ப்பது போல் பயபக்தியாக பார்ப்போம்.  கொதிக்கும் மஞ்சள் தண்ணீரில் தென்னம் பூவை நனைத்து தன் முதுகில் அடித்துக்கொண்டு சாமி ஆடும்போது சிலதுளிகள் நம் மீது பட்டு விடும் சூடு தாங்கமுடியாமல் கத்திவிட்டு வீட்டிற்கு வந்ததும் அத்தையிடம் இதை சொன்னதும் அவள் " அதுதான் டா சாமி சக்தி, சாமியாடிக்கு எதுமே பன்னால பாத்தியா?  ஆடுனது அவன் இல்லடா, அவனுக்குள்ள இருந்த ஆத்தா" என்பாள் பயத்துடன் கேட்டுவிட்டு அடுத்த நாள் கடையில் டீ குடிக்கும் சாமியாடியயே பார்த்துக்கொண்டிருப்போம்.  அவரே கடவுள் போல தோன்றும்.  விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் பொது ஒரு வாரத்திற்கு இந்த கதை தான் நண்பர்களிடம் சொல்ல.

                       கொஞ்சம் வளர்ந்த பிறகு விடுமுறைக்கு அத்தை வீட்டிருக்கு செல்ல அனுமதி கிடைப்பதில்லை.   அண்மையில் அத்தை ஊருக்கு சென்றிருந்தேன் .  பழைய நிகழ்வுகளை எதிர்பார்த்து சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  பல வயல்கள், தோப்புகள் வீடுகளாக மாற்றப்பட்டு இருந்தன.  தெருவில் எந்த சிறுவர்களையும் பார்க்க முடியவில்லை.  கோவிலில் திருவிழா என அத்தை கூறிய பிறகே தெரிந்தது.  கோவில் வில்லுபாட்டு சத்தத்திற்கு பதிலாக வீடுகளில் ஓடும் தொலைக்காட்சியின் சத்தமே கேட்டது.  கடைசி நாள் மட்டும் தான் கோவிலில் கூட்டம் வருமாம், அதனால் அன்று மட்டுமே நிகழ்சிகள் நடைபெறுமாம்.

                         கிராமங்கள் மாறிக்கொண்டு வருவதைப்பற்றி பல கட்டுரைகள் படித்த போது பெரிதாக எதுவும் தோன்றாத எனக்கு அன்று அத்தை வீட்டிலிருந்து திரும்பும்போது மனம் கனமாக இருந்தது.  இப்பொழுதெல்லாம் எந்த சிறுவர்களும் விடுமுறைக்கு அத்தை, சித்தி வீட்டிற்கு செல்வதில்லை விடுமுறையில் கூட பல வகுப்புகளில் சேர்த்துவிடுகிறார்கள் நம் பெற்றோர்.  நமது முன்னோர் பார்த்து ரசித்த பல விஷயங்களை நாம் பார்க்கவில்லை,  நாம் ரசித்த சில விஷயங்களை கூட அடுத்த தலைமுறை பார்க்க போவதில்லை.  இப்படியே போனால் வருங்காலத்தலைமுறை இயந்திரங்களையும், கட்டிடங்களையும் மட்டுமே ரசிக்கவேண்டி வரும்.

                          இன்றைய குழந்தைகளிடமும் இயற்கையை ரசிக்க வேண்டும், கிராமிய கலைகளை அறியவேண்டும் என்ற ஆர்வம் இல்லை.  இதை பற்றி எடுத்து சொல்லவும் நமக்கு நேரமில்லை.   நாகரிகத்தில் முன்னேருவதாக எண்ணிக்கொண்டு நாம் நமது இயற்கையை இழந்துகொண்டிருக்கின்றோம்.  வருத்தப்படவேண்டிய விஷயம்........ :(

Sunday, 14 August 2011

மறக்க முடியாத நாள்

             எல்லாருடைய வாழ்க்கைலயும் மறக்கமுடியாத நாட்கள் இருக்கும் அதில் சில மகிழ்ச்சியானதாகவும், சில  சோகமானதாகவும்  இருக்கும்.  ஆனால் ஒருசில  நாட்கள் சிரிப்பானதாக இருக்கும், அப்படிப்பட்ட ஒரு நாளைப்பற்றி உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்.
            இது நிகழ்ந்தது 2006இல் , அப்பொழுது நான் ஹிந்தி பிரவின் பரிட்சை எழுத முடிவுசெய்தேன் ( எனது அம்மா "உன்னவிட சின்ன பிள்ளைங்க எல்லாம் ஹிந்தி பரிட்சை முடிச்சிட்டாங்க நீ மட்டும் எதையும் ஒழுங்கா செய்யாத" என திட்டியதன் விளைவு இந்த அவசர முடிவு).  அதனால் புத்தகத்தை தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்கி படிக்க ஆரம்பித்தேன் ( அம்மா நம்பனும்ல).  படிப்பது எப்படி? நல்ல பிள்ளையா தினமும் அத்தை வீட்டிற்கு சென்று படிப்பது என முடிவானது.  அதன்படி தினமும் அத்தை வீட்டிற்கு சென்றேன் (போற வழில தான் என் நண்பர் வீடு உள்ளது இப்ப புரிஞ்சிருக்குமே நான் ஏன் அத்தை வீட்டுக்கு போக முடிவெடுதேனு).
             இப்படியே இரண்டு மாதங்கள் சென்றதில் பரிட்சை தேதி வந்தது. இது போன்ற அரசாங்க தேர்வுகள் எல்லாம் எஸ்.எல்.பி பள்ளியில் நடைபெறுவது வழக்கம்.  பிரவீன் தேர்வில் மொத்தமாக 3 எழுத்து தேர்வு மற்றும் 1 நேர்முக தேர்வு 2 நாட்களாக நடைபெறும்.   முதல்நாள் 2 தேர்வும் எப்படியோ எழுதி முடித்துவிட்டேன்.  3 வது தேர்வு இலக்கணம் (தமிழ் இலக்கணமே நமக்கு அரகொற இதுல ஹிந்தி இலக்கணமா? )
  எஸ்.எல்.பி பள்ளி
           தேர்வு அறைக்குள் சரியான நேரத்தில் சென்றுவிட்டேன்.  பக்கத்தில் ப்ராதமிக் தேர்வு எழுதும் ஒரு சிறுவன் ( அப்படா நாம எழுதுறத பாத்தாலும்  இவனுக்கு புரியாதுநு ஒரு சந்தோசம்) இருந்தான்.  விடைத்தாள், வினாத்தாள் எல்லாம் வழங்கப்பட்டது.  வினாத்தாள் பார்த்ததும் ஒரு சந்தேகம் இது நமக்கானதுதானா? ( அப்புறம் என்னங்க நா படிச்சது எதுமே வரல).   தேர்வின் பெயர் எல்லாம் சரியாக இருந்ததால் இது பிரவீன் வினாத்தாள் தான் என நம்பி எழுத ஆரம்பித்தேன் (வேற வழி).  சரியாக ஒரு மணிநேரம் எழுதினேன்  ( மொத்தம் 3 மணிநேரம் ).  பக்கத்தில் இருந்த சிறுவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் (ஆஹா! கண்டுபிடிச்சிட்டானோ!!!).  சரியாக கவனித்த பிறகு தெரிந்தது அவனுக்கும் எதுவும் தெரியவில்லை (அப்படா!!!).  சரி, அவனுக்காவது உதவி செய்யலாம் என நினைத்து அனைத்து விடைகளையும் சொல்லிக்கொடுத்தேன் ( சரியாதாங்க..... நம்புங்க).
           3 மணிநேரம் முடிந்தது " அக்கா, நன்றி" என தம்பி விடைபெற்றான்.   வெளியில் வந்து அடுத்த நேர்முக தேர்வுக்காக தயாராக நினைத்தேன் (அதாச்சும் ஒழுங்கா பண்ண வேண்டும் என்ற நல்ல எண்ணம்.  நேர்முக தேர்வு அறையின் முன் பலர் காத்திருந்தார்கள்.  அவர்களிடம் நானே அறிமுகமாகி காலையில் நடந்த தேர்வு பற்றி விசாரித்தேன்.  அனைவரும் வினாத்தாள் மிக கடினம் என கூறினார்கள் ( ஒரு சந்தோசம்).   அத்தோடு நான் நிறுத்தியிருக்கலாம், வினாத்தாளை எடுத்து அவர்களிடம் "question எல்லாம் out of syllabus பாத்திங்களா?" என்றேன், அதன்பிறகு தான் தெரிந்தது syllabus மாறிவிட்டதாம் ( அவமானம்....).   இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் எப்படியோ சமாளித்தேன்.  அதன் பிறகு தனியாக அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன் ( வேற என்னங்க பண்ண புக் தான் மாறிபோச்சே படிக்கவா முடியும் புரட்ட தான் செய்யணும்..... ).
         ஒரு வழியாக எனக்கான முறை வந்தது.   தேர்வாளர் ஒல்லியாக சிடுசிடுவென இருந்தார்.  அவரைபற்றி விசாரித்தபோதே என் தேர்வு முடிவு என்னவாக இருக்கும் என புரிந்தாலும் என் பெயரை அழைத்ததும் உள்ளே சென்றேன் ( சிக்கிடோம் தப்பிக்கவா முடியும்?!!!?....).
          தேர்வாளர் சரியாக 30 நிமிடம் என்னிடம் கேள்விகேட்டார் ( அப்போ நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாருங்க .....). 10 கேள்விகள் கேட்டிருப்பார்,  அதில் உன் பாடப்புத்தகத்தில் எத்தனை பாடங்கள் உள்ளன என்பதும் காலையில் எழுதிய தேர்வில் வெற்றி பெற்று விடுவாயா என்ற கேள்வியும் அடக்கம்,  அவரின் அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரே பதிலை நான் கூறினேன்.  என்ன தெரியுமா? " மாப் கீஜியே முஜே நஹி மாலும் ".   "சாரி சார், எனக்கு தெரியாது" என்பதுதான் அதன் அர்த்தம் (நாங்க எப்பவும் உண்மைய தான் சொல்வோம் ... ஆமா!!).
         ஒருவழியாக என்னை வெளியில் போக அனுமதித்தார் (நான் வெளிய வந்த பிறகு 10 நிமிடத்திற்கு யாரும் உள்ளே அனுமதிக்கப்படலங்க்றது வேற விஷயம்).   இப்போ உங்க எல்லார் மனதிலும் உள்ள ஒரு கேள்வி நான் வெற்றி பெற்றேனா என்பது தானே?   சரியாக 2  மாதத்திற்கு பிறகு எனக்கு இதே கேள்விக்கு விடை கிடைத்தது.  ஆம் நான் வெற்றி பெற்றேன் ( அந்த தம்பி பாஸ் பண்ணான்னு தான் தெரியல.....).  இரண்டாம் நிலையில் தேர்வு அடைந்தேன்.  நேர்முகதேர்வில் நான் பெற்றது 54  மதிப்பெண்கள் ( பாஸ் மார்க் 50 ).
           நான் தேர்வு எழுதிய அந்த நாள் என்னால் மறக்க முடியாததாகி விட்டது ( அந்த தேர்வாளர பாத்தா கால்ல விழனும்....).

பி.கு
           கடந்த பதிவைபார்த்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....