Friday 20 January 2012

நண்பன்

                 விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் இலியானா  நடித்து ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் வெளியிடாக வந்துள்ள படம் நண்பன்.   நண்பன் விஜய் படம் என்றோ அல்லது ஷங்கர் படம் என்றோ சொல்ல முடியாது.. அது ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான், மாதவன் , சர்மான் ஜோஷி நடித்த 3 இடியட்ஸ் என்ற இந்தி படத்தின் தமிழ் பதிப்பே.   கதை பற்றி நான் இங்கு கூறினால் அது 3 இடியட்ஸ் படத்தின் விமர்சனமாகிவிடும் அதனால் கதை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.   நண்பன் மற்றும் 3 இடியட்ஸ் படத்தினை ஒப்பிட்டு மட்டுமே எழுதுகிறேன்.

                    நண்பன் படத்தின் நடிகர்களின் நடிப்பை மட்டுமே ஒப்பிட முடியும் ஏன் என்றால் காட்சி, வசனம் எல்லாம் 3 இடியட்ஸ் தான்.  ஜீவா, சர்மான் ஜோஷி நடித்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான தேர்வு, அதை மிகக்கச்சிதமாகவும் செய்துள்ளார்.    ஜீவாவின் நடிப்பு சர்மான் ஜோஷியை காப்பியடித்தது போலவும் இல்லை, வித்தியாசமாகவும் இல்லை கதாப்பாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்துள்ளார்.  ஆரம்பம் முதல் கடைசிவரை இவரது நடிப்பு தெளிவாக இருக்கிறது.

                   சத்யராஜ் இதுவும் எதிர்பார்த்த தேர்வு தான் போமன் இராணி கதாப்பாத்திரத்திற்கு.   சத்யராஜ் சில காட்சிகளில் வழக்கமான சத்யராஜ் போலவும் பெரும்பாலான காட்சிகளில் போமன் இராணி போலவும் நடித்துள்ளார்.  சத்யனுடைய நடிப்பும் இதைப்போலவே பல நேரங்களில் சாதாரண சத்யனாகவும் சில நேரங்களில் ஓமி வைத்யாவைப்போலவும் உள்ளது.  இந்த வித்யாசம் சத்யராஜின் கதாபாத்திரத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஆனால் சத்யனின் கதாபாத்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக எனக்கு தோன்றுகிறது.  சரியாக தமிழ் தெரியாத பாத்திரமாக அறிமுகபடுத்திவிட்டு பல இடங்களில் நல்ல தமிழில் பேசியது மாறுபட்டு தோன்றியது எனக்கு.

         
                  3 இடியட்சில் மாதவனின் நடிப்பில் இருந்த உயிரோட்டம் ஸ்ரீகாந்தின் நடிப்பில் இல்லையென்றே கூறலாம்.   மற்றபடி மில்லிமீட்டராக வரும் சிறுவன், ஸ்ரீகாந்த், ஜீவா இருவரின் பெற்றோர்,  இலியானாவின் அக்கா கதாபாத்திரங்கள் தங்களின் பங்கை நிறைவே செய்திருக்கிறார்கள்.   படத்தின் கதாநாயகி இலியானா அவரும் நன்றாகவே செய்திருக்கிறார்.  இலியானாவை இணையதளத்தில் விமர்சித்தவர்கள் நண்பன் படத்தில் அவரின் வசன உச்சரிப்பை பற்றி எதுவுமே விமர்சிக்கவில்லை.  தமிழ் படாதபாடு படுகிறது இலியானாவின் உச்சரிப்பில் (பின்குரல் யாருன்னு தெரியல).   எஸ். ஜே. சூரியாவின் நடிப்பும் நல்லா இருக்கு, சரியான தேர்வு.

                  இனி விஜய், அமீர் கான் செய்த கதாபாத்திரத்தை அதன் அழகு கெடாமல் செய்ததர்க்கே அவரை பாராட்டலாம்.  பறந்து பறந்து சண்டை போடறது, பஞ்ச் டயலாக் பேசறது, அரசியல் வசனம் போன்றவை இல்லாத விஜய பாக்ரதுக்கே நிம்மதியா இருக்கு.  விஜய் ரசிகர்களுக்கு பிடித்த விஜய் என்றுகூட சொல்லலாம்.  பல காட்சிகளில் அமீர் கான் கொடுத்த ரியாக்ஷன்னே விஜயும் கொடுக்க முயற்சித்துள்ளார் அதில் 90 % வெற்றியும் அடைந்துள்ளார் என சொல்லலாம்.  All is well விஜய் சொல்றத விட அமீர் சொல்ற விதம் நல்ல இருக்கு.  நண்பன் விஜய் சூப்பர்.

                 இது எல்லாம் 3 இடியட்ஸ் படத்தை 25 முறைகளுக்கு மேல் பார்த்ததால் எனக்கு தோன்றியவை.   3 இடியட்ஸ் படம் பார்க்காதவர்களுக்கு நண்பன் ஒரு சிறந்த படமே.  அதுவும் கடைசி பகுதி சிறப்பாக அமைந்துள்ளது எனக்கு ஒப்பிட தோணவில்லை நண்பன் படமாகவே ரசித்தேன்.  என்னை பொறுத்தவரை நண்பன் ரொம்ப நல்லா இருக்கு.  ஆனால் எனக்கு புரியாத ஒன்று பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கர் ஏன் இந்த படத்த எடுத்தார்???   3 இடியட்ஸ் படத்தை யார் எடுத்தாலும், எந்த மொழியில் எடுத்தாலும் எந்த மாற்றமும் செய்யமுடியாது அப்டி இருக்கும் பொழுது சங்கர் ஏன் இந்த படம் செய்தார்??  

1 comment:

  1. மிகச்சரியான மற்றும் நடுநிலையான விமர்சனம். வாழ்த்துகள்

    ReplyDelete